நான் பிறந்த ஆண்டு 1966, அக்டோபர் மாதம் 7ம் நாள் காலை 5 மணி என்று கேட்டநினைவுகள் உள்ளது. பள்ளியில் சேர்ப்பதற்காக அந்த கால வழக்கப்படி பின்னர் அது ரெம்ப பேன்சியாய் 5 ம்மாதம், 5 ம் தேதி 66 ம் ஆண்டு என்று மாறிப்போனது, என் அப்பாவின் ரசனையை பின் வந்த காலங்களில் வியந்ததுண்டு.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வடசேரியில் பிறந்தேன். குடும்பச்சொத்துகளை என் பெரியப்பாவும், என் சித்தப்பாவும் புத்திசாலித்தனமாய் ஆட்டைய போட்டுவிட்டதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். இருவரும் இரு பெரிய குடும்ப வீடுகளை ஆளுக்கொன்றாய் எடுத்துக்கொண்டு எங்களுக்கு புத்தேரிப் பத்தில் இருந்த வயலை விட்டுக்கொடுத்துவிட்டனர், என் அப்பாவுக்கு அப்போது கொஞ்சம் கடன் இருந்ததால் அவர் குடும்பவீட்டைக் கொடுத்தால் விற்றுவிடுவார் என்று பெரியவர்களிடம் சொல்லி ஆட்டைய போட்டனர்.
அப்பாவும் வயலை விற்றுவிட்டார் எதிர்பார்த்ததை போலவே, பின்னர் சித்தப்பா, பெரியப்பா இருவருமே குடும்ப வீட்டின் பெரும்பங்கை விற்றுவிட்டனர் அவரவர்க்கு தேவைகள் வரும்போது, ஆனால் இப்போதும் அதில் ஒரு சிறு பகுதியில் தான் வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் சொல்லவேண்டும்.
அம்மா ஹோம்மேக்கர் என்று இப்போதைய நாகரிகத்தில் சொல்லிவைக்கிறேன். எனக்குமுன் ஒரு அக்கா என் வீட்டில், இருவருக்கும் 2 வயது வித்தியாசம். நாங்கள் இருவரும் தான் என்பதால் வீட்டில் பாசமழை பொழியும், எனக்கு ஏதாவதென்றால் இன்றுவரை அவள் விடமாட்டாள், நான் இன்றும் சின்னப்பிள்ளை தான் அவளைப்பொருத்தவரை.. அவன் சின்னப்பையன் (நான் தான் யுவர் ஆனர்??) அவனுக்கு என்ன தெரியும் என்று ஆர்குமென்ட் என் அத்தானிடம்?? அதேபோல் அவளுக்கு ஏதாவதென்றால் நானும் விடமாட்டேன், மனைவியின் எதிர்ப்பையும் மீறி. (என்னா ஒரு வில்லத்தனம்??)
நான் பிறக்கும் போது என் அப்பாவுக்கு 90 ரூபாய் சம்பளம் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். சம்பளம் வாங்கி என் அம்மாவின் கைகளில் கொடுப்பதுடன் அவர் கடமை முடிந்தது, குடும்பத்தை கட்டி இழுத்துச்சென்றது என் அம்மாவின் நிர்வாகத்திறமை தான்.
குடும்ப வீட்டை விற்றபின் வீடு வீடாய் வாழ்ந்திருக்கிறோம் வடசேரியிலேயே பல வீடுகளில், (தக்காளி, எவனும் கெஸ் செய்ய முடியாது நான் யாரென்று!!) அப்போது அது எங்களுக்கு பழகிப்போன ஒன்று, இப்போது சொத்துக்கள் அல்லது எடுத்துப்போக ஏதும் சேர்த்துவைக்காத துபாயிலேயே வீடு/ரூம் மாறுவது என்பது மிக சிரமம், ஆனால் அப்போது பல வீடுகள் மாறியது சிரமமாய் தெரியவில்லை எனக்கு! காலம் அப்படியே கடந்து சென்றது..
சாப்பாட்டுக்கு இல்லை என்று என்நினைவு தெரிந்து ஞாபகமில்லை.. ஏதோ ஒன்று கிடைத்தது சாப்பிடுவதற்க்கு, அம்மா/அப்பா சாப்பிடாமல் எனக்கு கொடுத்தார்களா என்பதெல்லாம் தெரியாது. ஆனால் ஒரு பொங்கல் நாள் தெருவில் எல்லோரும் கோடி கட்டும் போது என் அம்மா வேறு வழியே இல்லாமல் கண்ணீருடன் ஒரு கைத்தறி சேலை கட்டி பொங்கல் விட்டேன் என்று என் அப்பாவிடம் அன்று சிறு சண்டையிட்டதும் இன்றும் நினைவில் உள்ளது.
என் தாத்தா, ஆச்சிமேல் அப்பாவிற்க்கு பாசம் அதிகம், அவர்களை என் சித்தப்பா, பெரியப்பா க்களைவிட நன்கு கவனித்துக்கொண்டார் என் அம்மாவிற்க்கு அவ்வளவு விருப்பம் இல்லாத போதும், நான் இன்றுவரை என் அம்மா, அப்பாவை என் உடன்வைத்து கவனித்துக்கொள்வதற்க்கு என் அப்பாவை நான் சின்ன வயதில் அருகில் கவனித்தது தான் காரணம் என நினைக்கிறேன்.
என் அம்மாவின் நிர்வாகத்திறமை அசாதாரணம், நாங்கள் ஒரு வீடு சொந்தமாய் வாங்குவது வரை அவள் ஓயவில்லை.. என் மனைவி இதற்க்கு நேர் எதிர்.. என் சம்பளம் எவ்வளவு என்பது கூட இத்தனை நாளும் அவளுக்கு தெரியாது, அதில் அவளுக்கு ஆர்வமும் இருந்ததில்லை அப்போதும், இப்போதும்! எனக்கு இவ்வளவு வேண்டும் இந்த மாதத்திர்க்கு, ஒரே தேவைதான், அது என்ன கர்மமோ, நான் அதிகம் சம்பாதிக்க, சம்பாதிக்க அவள் தேவைகளும் கூடிக்கொண்டே இருந்தது, நான் என்ன சம்பாதிக்கிறேன் என்று தெரியாமலேயே.. அதுதான் அவள் சாமர்த்தியம்.
பிறந்து ஒன்றரை அல்லது இரண்டு வருடம் வரை நான் ஊமை பாஷையே பேசிவந்ததாகவும் பின்னர்தான் பேச்சு வந்ததாகவும் என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன்.
அந்தகால வழக்கப்படி, ஒரு சரஸ்வதி பூஜை நாளுக்கு அடுத்து வரும் ஏடு தொடங்கும் நாளில் என்னையும் ஏடுதொடங்க அருகில் இருக்கும் சிவன்கோவிலில் அப்போது வடசேரியில் நடந்து வந்த திருவள்ளுவர் பாலர்பள்ளிக்கு (இப்போது ராக்பெல்லர் இங்லீஸ் ஸ்கூல்.. அதே மாமாசாரா என்பது தெரியாது) அழைத்துச்சென்றனர். ஒரு வழியாய் பாலர்பள்ளியில் அரைகிளாஸ் படிக்கச்சேர்ந்தேன். முதல்நாள் அழுதேனா சிரித்தேனா என்பதெல்லாம் நினைவில் இல்லை.
மாமாசார் என்று அப்போதைய பள்ளி (அரைகிளாஸ்??) முதல்வரை அழைப்போம். மாமாசார் எல்லோருக்கும் அப்போது எப்போதாவது சாக்லேட் எல்லாம் தருவார். அது போக மிச்சம் இருக்கும் சிறுவயது அரைகிளாஸ் நினைவில் மாமா சாருக்கு இரண்டோ அதற்க்குமேலோ மனைவிகள் உண்டென்று பின்னர் கேள்விப்பட்டதுதான், நல்ல டீச்சர்களை தேர்ந்தெடுத்து அவர்களை திருமணம் செய்து அவரவர்க்கு ஒரு பாலர்பள்ளி என்று நிறைய இடங்களில் மாமா(??)சார் வைத்துக்கொடுத்ததாய்(பள்ளிகளை) பின்னர் கேள்விப்பட்டிருக்கிறேன். சரியா தவறா அல்லது இது இங்கே தேவையா இல்லையா என்றெல்லாம் தெரியாது, இது என் நினைவுளை இறக்கி வைக்கும் இடம் மட்டும்தான்.
அரைகிளால் வெற்றிகரமாய் முடித்து அருகிலேயே இருக்கும் கக்கூஸ் பள்ளிக்கூடத்தில் ஒண்ணாப்பு சேர்த்தார்கள். பள்ளியின் அருகிலேயே வண்ணார்கள் வசிக்கும் இடம் இருந்தது, எங்கள் பள்ளியை அடுத்தும், பணிக்கர் தெருவின் பின்புறமும் இருந்த முடுக்கில் அப்போது பெண்கள் எல்லாம் கக்கூஸ்போகும் இடம் இருந்ததால் இந்தப்பள்ளிக்கு அப்பெயர் வந்தது. இதை அரசு தொடக்கப்பள்ளி என்றும் நாகரீகமாய் சொல்லலாம். ஆனால் ‘எங்கலேய் படிக்க?‘ என்று கேட்டதும் நான் அரசு தொடக்கப்பள்ளி என்றதற்க்கு ‘ஓஹோ கக்கூஸ் பள்ளோடத்லயா??‘ என்றது தான் இப்போதும் நினைவில் நிற்ப்பது.
இதை விட்டு மற்றபடி எஸ். எம். ஆர். வீ என்றும் ஒரு தனியார் பள்ளி (அரசு உதவி பெரும் பள்ளிதான்) அருகிலேயே இருந்தது, ஒருவேளை அங்கே பீஸ் கூடுதலாயிருந்ததால் என்னை கக்கூஸ் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்களா என்று தெரியாது, அப்படி என்ன பீஸ்கூடுதலோ அதுவும் தெரியாது, அங்கே இங்கிலீஸ் மீடியமும் அப்போதே இருந்தது, நம் தலையெழுத்து கக்கூஸ் பள்ளோடம் தான் போலும் என்று நானும் விட்டிருக்கிறேன் போலிருக்கிறது.
ஆனால் எனக்கு ரொம்ப நாளாய் என் வாழ்க்கையில் இருந்த காம்ளக்ஸ்/தாழ்வு மனப்பான்மை இந்த கக்கூஸ் பள்ளிக்கூடத்தில் படித்ததால் தான் என்று உறுதியாய் நினைக்கிறேன். எஸ். எம். ஆர். வீ மாணவர்கள் ஒரு படிமேல் போல் தோன்றும். அவர்களைக்கண்டால் அலறி ஓடுவோம். வசதி கூடிய மாணவர்கள்தான் அங்கு அதிகம் படித்தனர், அந்த பள்ளி சாலியர் என்ற சமுதாயத்தினரால் நடத்தப்பட்டது, அங்கும் வறுமையில் உள்ளவர்கள் அதிகம்தான் இப்போதும் என்றாலும் எனக்கு அந்த காம்ளக்ஸ் இருந்தது நிஜம்.
பொதுவாகவே நாட்டில் அப்போது வறுமை தாண்டவமாடியது என்று நினைக்கிறேன். புதுத்துணி என்றால் எனக்கு தீபாவளிக்கு தீபாவளிதான். என் அப்பாவிற்க்கு அப்போது தீபாவளிக்கு போனஸ் கிடைக்கும். அவர் அப்போது வேலை பார்த்தது, அரசு போக்குவரத்துக்கழகத்தில் மெக்கானிக்காய். இப்போதுள்ள என் மகன்/மகளைப்போல் பிறந்த நாள், ஸ்கூல் திறப்புக்கெல்லாம் அந்த வயதில் ப்ராண்டட் ஷர்ட் மற்றும் பேன்ட் கிடைத்ததாய் எனக்கு நினைவு இல்லை.
எங்கள் பள்ளியில் அப்போது யூனிபார்ம் என்று ஏதும் இல்லை, நான் ஆறாப்பு அல்லது ஏழாப்பு படிக்கும் போதுதான் அந்த கருமம் எல்லாம் வந்தது. ரெண்டாப்பு அல்லது மூணாப்பு படிக்கும் போது ஒரு மழைநாளில், ஸ்கூல் திறந்த புதிதில் நான் எல்லா புது புத்தகம், நோட்டு எல்லாம் என் அம்மா வேண்டாம், வேண்டாம் என்று சொல்லச்சொல்ல நான் மறுத்து அடம் பிடித்த கழுதையாய் எல்லாவற்றையும் என் தோளில் வைத்து ஸ்டைலாய் கொண்டுபோகும் போது பள்ளி நுழைவாயிலில் தேங்கிகிடந்த மழை நீரில் உடன் வந்த ஒரு பயபுள்ளை தட்டிவிட்டு எல்லாம் போட்டு நனைத்து எடுத்து வந்தது நினைவு இருக்கிறது. என் அக்கா பக்கத்திலேயே நின்று எல்லாம் எடுத்து தந்துகொண்டே ‘வீட்டுக்கு வா‘ என்று மிரட்டியதும், சாயங்காலம் வாங்கிய பூசைகளும் நினைவில் உள்ளன, எனக்கு வேறு புது நோட்டுகள் எல்லாம் வாங்கிக்கொடுக்கவில்லை. வாங்கிக்கொடுக்க வில்லையா அல்லது நான் கேட்கவில்லையா என்பது நினைவில்லை.
ஆனால் இங்க் பேனா வைத்து அந்த நோட்டில் எழுத முடியாது தண்ணீரில் நனைந்துவிட்டதால்,, அதனால் ரீபில் பேனாவால் (ரீபில்னு தான் அப்போது சொல்லுவோம், ஒருவேளை அது நெட்டு பென்னோ??) அந்த நோட்டுகளில் கடைசி வரை எழுதி பப்படக்கட்டாய் அதை கைகளில் வைத்திருந்தது இன்னும் நினைவில் உள்ளது.
நண்பர்கள் என்றால், சங்கர் என்று வண்ணார் தெருவில் இருந்து உடன் படித்த ஒரு நண்பன் இருந்தான், செல்வராஜ், ராபின்சன் என்று அப்பொழுது அழைக்கப்பட்ட சவளக்காரத்தெரு வீரர்கள் இருவர் உண்டு. இப்போது அந்த தெரு பரதர் ஸ்டிரீட் என்று நாகரீகமாய் அழைக்கப்படுகிறது, என் தெருவிலேயே இருந்த மகேஷ் இவர்கள் தான் அஞ்சாப்பு படிக்கும் வரை நண்பர்கள். பொன்னம்மாள், தாணம்மாள், விஜி என்ற நண்பிகள் பேரும் நினைவில் உள்ளது.
சங்கர் இப்போது அரசுபோக்குவரத்துக்கழகத்தில் டிரைவர் என்று நினைக்கிறேன், சென்ற விடுமுறையில் நான் என் உறவினர் ஒருவரின் ரிட்டையர்மென்ட் ஃபங்ஷனில் அவனை கவனித்தேன், அவனிடம் பேசலாம் என ஆவலுடன் சென்றபோது, பயல் விலகிச்செல்வது போல் தோன்றியது, பாவம் இன்னும் பழைய தாழ்வுமனப்பான்மையை விட்டு வெளியே வரவில்லையோ என்னவோ? இரண்டு முறை முயன்று அவன் விலகிச்செல்லவும் விட்டுவிட்டேன்.
மகேஷ் ஆறாப்பிலிருந்து எஸ். எம். ஆர். வீ போய்விட்டான், அவன்தான் என் அஞ்சாப்பு வரை உயிர்நண்பன், அவனுடைய அம்மா நான் படித்த கக்கூஸ் பள்ளிகூடத்தில் ஒரு ஆசிரியை, வேணி டீச்சர், நான் ட்யூஷன் படித்ததும் அவரிடம் தான். ஒரு சராசரி மாணவனாகவே நினைவில் உள்ளது, முதல் ரேங் வாங்கியதாய் சத்தியமாய் நினைவில் இல்லை. ...
கோலப்ப வாத்தியார் என் வகுப்பாசிரியர், என் பெயர் தப்பாகவே கடைசி வரை ஸ்பெல் செய்யப்பட்டதற்க்கு அவர்தான் காரணம் யுவர் ஆனர்.. அதை தவிர நினைவில் நின்ற ஆசிரியர்கள் என்றால், இன்னொரு கறுத்த கிறிஸ்தவ டீச்சர்... ஒரு நான் நான் வகுப்பில் இவரிடம் அடி வாங்கிவிட்டு மகேஷிடம் எதிர்த்தார் போல் கண்ணில் அடித்த (வகுப்பில் இருக்கும் போதே) சூரிய ஓளியினால் தான் கண்ணில் கண்ணீர் என்று புரூடா விட்டிருக்கிறேன்.
மற்றும் ஜயர் வாத்தியார்.. பின்னர் நான் ஆறாப்பு படிக்கும் போது ஐயர் வாத்தியார் ஹைஸ்கூலுக்கும் மாறி வந்து விட்டார். அஞ்சாப்பு படிக்கும் போது நல்ல கருத்த மீசை வைத்த அண்ணாத்துரை போல் ஒரு ஹெட்மாஸ்ட்டரை ஞாபகம் உள்ளது, இவர் கொஞ்சம் குள்ளம். ஆனால் மீசை அபாரம், அப்படியே கால்கள் நடுங்கும் அவர் எதிரில் நின்றால்.
ப்ரைமரி என்பது என் பள்ளியில் இரண்டு வேறுவேறு பகுதிகள் கொண்டது, இந்த கக்கூஸ் பள்ளிக்கூடம் என்ற ஒரு இடம் ஒன்று, செட்டு பள்ளிக்கூடம் என்பது இன்னொன்று, தலைமையிடம் நான் படித்த கக்கூஸ் பள்ளிக்கூடம் தான், செட் பள்ளிக்கூடம் இதன் ப்ராஞ் போன்றது. என்ன கருமமோ இதன் பின்புறமும் கக்கூஸ் போகும் இடம் இருந்து தொலைத்தது நினைவில் உள்ளது. அதன் பின்பு இருந்த சவளக்காரத்தெருவுக்கும் எங்கள் பள்ளிக்கும் இடையே.
இரண்டு நீண்ட ஷெட்கள் உள்ள பகுதி அதனால் இதன் பெயர் செட்டு பள்ளோடம். நடுவில் ஒரு கேட் மட்டும், அது நாங்கள் விளையாடும் இடம்?? ஒரு பத்து அடிக்கு 100 அடி நீண்ட பகுதி நடுவில் நாங்கள் விளையாடிக்கொள்ள, இறு புறமும் ரெண்டு ஷெட்கள், நீள நீளமாய், ஒரு க்ளாசையும் மன்றொன்றையும் மறைப்பது, காட்போடு தட்டி மறைப்புகள், சில வகுப்புகளுக்கு அதுவும் இல்லை. தறையில் தான் உட்கார்ந்து கொள்ள வேண்டும், பெஞ்ச், டெஸ்க் என்பதெல்லாம் ஆறாப்பிலிருந்து தான்.
இந்த இரு பள்ளிகளிலும் தான் நான் ஆனா, ஆவன்னா படித்தது, ஆங்கில இலக்கியம் எல்லாம் எனக்கு அப்போது பாடம் நடத்தியவர்களுக்கே தெரியும் என்று நான் சத்தியம் எல்லாம் செய்யமுடியாது, நான் அப்படி ஒன்றை கேள்விப்பட்டதே இல்லை அந்த வயதில்.
தமிழை பொருத்தவரை கோடிட்ட இடத்தை நிரப்புக இன்னும் நினைவில் உள்ளது, எதிர்ச்சொல் என்பது இன்னும் நினைவில் உள்ளது. எதுகை, மோனை, யாப்பு கோப்பு எல்லாம் கிலோ என்ன விலை?? தான் அப்போது.
நான் மக்கு என்று சொல்லலாமா என்றால் என்னிடம் அதற்க்கும் உறுதியான பதில் இல்லை, நான் மக்கா, இல்லையா என்பதை நீங்களே யூகியுங்கள்.. ஆனால் ஏ, பி, சி, டி எத்தனை எழுத்து என்பதுவே எனக்கு அஞ்சாப்பு படிக்கும் வரை தெரியாது, எப்பூடி படிச்சிருக்கென்/படிக்க வைத்திருக்கிறார்கள் பாருங்கள்?? ஏதோ ஒப்புக்கு படித்தேன் நானும்.
என் ஹைஸ்கூல் நினைவுகள் இன்னொரு சந்தர்ப்பத்தில்.
அன்புடன், வசந்தா நடேசன்.
மிகவும் சிறப்பான உங்களின் பின்னோக்கி பயணத்திற்கு நன்றி
ReplyDeleteஇது என் தொலைபேசி இலக்கம் நீங்கள் விரும்பினால் தொடர்பு கொள்ளவும்
00971501431819
பசுமையான நினைவுகள்..
ReplyDeleteஉண்ணுதலில் இருக்கும் சுகத்தை விட
ReplyDeleteஎனக்கும் அசைபோடுதலில் விருப்பம் அதிகம்
மிக இயல்பாக நடந்த விஷயங்களை சொல்லி போகிறீர்கள்
.இந்த பதிவைப் போல நீளங்களை நீீங்கள்
முடிவு செய்யாமல் அதன் போக்கில்விடுங்ள்
நல்ல பதிவு தொடருங்கள் தொடர்ந்து வருகிறோம்
வாழ்த்துக்கள்
அடேங்கப்பா செம நீளமான பதிவு சார்.
ReplyDeleteநல்லா இருக்கு உங்க சத்திய சோதனை.
ReplyDeleteநான் 1970 மார்ச்.
அண்ணா...........ஆ ஆ ஆ
நினைவுகளை திரும்பிப் பார்ப்பதே ஒரு சுகம் தான்...
ReplyDeleteவலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
பிறந்ததில் இருந்து நினைவுகளை சுவையாக சொல்லி உள்ளீர்கள்
ReplyDeleteஎன் அப்பாவுக்கு அப்போது கொஞ்சம் கடன் இருந்ததால் அவர் குடும்பவீட்டைக் கொடுத்தால் விற்றுவிடுவார் என்று பெரியவர்களிடம் சொல்லி ஆட்டைய போட்டனர்.
ReplyDeletehouse to house staircase .....only the size is different .....[how is my injikiLipeas]
until my tamil font is recovered you people must excuse my thanglish