வணக்கம்.. என் ஹைஸ்கூல் நினைவுகள் சில குறித்து.
என் ஹைஸ்கூல் ப்ரைமரியின் அடுத்தே இருந்த மலையாம்பள்ளோடத்திலேயே சோகத்துடன் தொடர்ந்தது. எஸ்.எம்.ஆர்.வீ அப்போதும் அமையவில்லை. நான் இப்படி சொல்வதால் ஏதோ எஸ்.எம்.ஆர்.வி ரொம்ப நல்ல ஸ்கூல் மலையாம் பள்ளோடம் ரொம்ப மோசம் என்று யாரும் நினைத்துக்கொள்ளவேண்டாம்.. அது தனியார்பள்ளி இது அரசுப்பள்ளி என்பதுதான் வித்தியாசம், சொல்லப்போனால் ப்ரைமரியை விட கொஞ்சம் திறமையான ஆசிரியர்கள் இங்கு இருந்தனர், எஸ்.எம்.ஆர்.வி யைவிட திறமையானவர்களா?? என்று எனக்கு தெரியாது என்பது தான் நிஜம்.
ஒருகாலத்தில் இங்கு மலையாளம் கற்பிக்கப்பட்டதால் இதற்க்கு மலையாம்பள்ளோடம் என்றே பெயர் நிலைத்துவிட்டது. நான் முன்பே சொன்ன காம்ளக்ஸ்/தாழ்வுமனப்பான்மை இங்கும் தொடர்ந்தது. ஆனால் என்னைவிட ஏழை மாணவர்களும் அப்போது என்னோடு படித்தார்கள் என்பதும் நினைவில் உள்ளது.
இதுவும் இரண்டு பகுதிகளாய் தான் இருந்தது,மெயின் ஸ்கூல் நான் முன்பு சொன்ன செட்பள்ளிகூடத்தின் அருகே.. அடுத்து அருகிலேயே க்ரவுண்ட் பள்ளிக்கூடம் என்று இதனுடன் சேர்ந்த இன்னொரு பகுதி இருந்தது. கொஞ்சம் பெரியபள்ளிதான். எங்கள் வீடும் அடுத்து அருகிலேயே இருந்ததால் நான் சாப்பாடு கொண்டுபோக முடியாது, வீட்டிற்க்கு சாப்பிட வந்துவிடவேண்டும். ஆனால் பள்ளியில் கொண்டுவந்து சாப்பிடும் பயல்களை பார்த்து நான் நம்ம வீடும் தூரத்தில் இருந்துத் தொலைத்திருக்காதா என்று நினைத்துக்கொண்டது உண்டு. என் ஹைஸ்கூல் இந்த இரு பகுதிகளிலும் தொடர்ந்தது.
பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான், பப்ளிக் எக்ஸாம், நன்கு படிக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் வந்தது.. அதுவரை விளையாட்டுப்பிள்ளை தான். என் அப்பா வீட்டில் ஏறி வரும்போதே கேட்கும் இன்று படித்தாயா?? என்ற கேள்விக்கு பயந்து கொஞ்சம் புத்தகத்தை புரட்டியது நினைவில் உள்ளது.
பள்ளிகளில் கடுமையான பனிஷ்மென்ட்கள் இல்லாதது மற்றும் மற்ற எல்லா பயபிள்ளைகளும் ஒன்றுபோலவே இருந்ததும் (படிப்பு விஷயத்தில்) காரணம் என்று நினைக்கிறேன், இப்போது இருக்கும் பிள்ளைகளிடம் இருப்பதுபோல் ஒரு போட்டி மனப்பான்மை எல்லாம் நமக்கு இருந்ததில்லை.. எல்லாரும் ஒண்ணுதான் மக்கான்னு போயிட்டிருந்த காலம்.
ஒருசில நன்கு படிக்கும் மாணவர்கள் இருந்ததையும் சொல்லவேண்டும்.. நம்ம கூட்டாளில்லாம் வேற.. நன்கு படித்த மாணவர்களில் ஆரம்பித்து கடைசி கழிசடை வரை நினைவில் நிற்க்கும் நண்பர்கள் பெயர் இதோ..
பள்ளியின் அருகிலேயே இருந்த பாக்கியம் பிள்ளை, முருகானந்தம், உமைதாணுபிள்ளை, மாதேவன் பிள்ளை, ஆசாரிமார் தெரு சிதம்பரதாணு, மாட்டிக்கொள்ளும் சிறு சந்தர்ப்பம் இருப்பதால் இடம் சொல்லாமல் மற்றவர்கள், எஸ். எஸ். கணேசன், நெட்டை சுரேஷ் மற்றும் கட்டை சுரேஷ், கட்டை ஐயப்பன், போலீஸ்காரர் மகன்கள் மகாதேவன் மற்றும் வெங்கட்ராமன், ராமன், ராஜ், முருகன், கோலப்பன், நெட்டை ஐயப்பன் மற்றும் கடைசி கழிசடையாய் நானும்.
பொம்பளப்புள்ளைங்க பேரு ஏதும் ஞாபகம் இல்லை, ரொம்ப நல்லவனா இருந்துருக்கேன் போல இருக்கு அல்லது எல்லோரையும் வகைபிரித்து வைத்திருந்தார்களா என்று தெரியவில்லை..
இவர்களில் கடைசியில் இருக்கும் ஒரு பத்து பெயர்கள் கொண்டவர்களை நாங்கள் ‘மக்ளே‘ என்றும் ‘தாளி‘ என்றும் அந்த மவனே, இந்த மவனே என்றும் அப்போதெல்லாம் எப்போதும் மாறி, மாறி அழைத்துக்கொள்ளும் ஒரு பொது அதிகாரம் இருந்தது எங்களுக்குள்..
ஒருவரை பற்றி இன்னொருவரிடம் கோள்மூட்டா பெரும்பண்பு இருந்தது, முதலில் இருப்பவர்கள் கோள்மூட்டுவதில் சமர்த்தர்கள் என்று நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம்.. அங்கு ஊதி, இங்கு ஊதி, சங்கு ஊதி என்றொரு சொல்வழக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது..
இந்தவயதில் கட் அடித்து சினிமா போவது வழக்கம் என்றாலும் என் வகுப்பில் அப்படி யாரும் போன ஞாபகம் இல்லை.. அதெல்லாம் பிற்கால சோழர்கள் ஆட்சியில்(?)
ஆசிரியர்கள் என்றால், மீசை வாத்தியாரை மறக்கமுடியாது.. கனத்த மீசையுடன், கருத்து கட்டையான ஒரு நபர், கண்கள் எப்போதும் சாராயத்தால் சிவந்தது போலவே தோன்றும், அது ஏனோ இவருக்கு ரீபில் பேனா என்றால் பிடிக்காது.. இங்க் பென் வைத்ததுத்தான் எழுதவேண்டும் அடம் பிடிப்பார் கையில் எப்போதும் பிரம்புடன். கணக்கு சொல்லி கொடுத்தார், கணக்கு பண்ண இல்லைங்கண்ணா!
பத்மாவதி டீச்சர், அந்த கால நடிகை சில்க்(!) போலவே இருந்த ஒரு விளையாட்டு டீச்சர் (இதல்லாம் மறக்காதுங்கண்ணா), மற்றும் ஒரு கிரேஸி டீச்சர். மறக்க முடியாத லேப் வாத்தியார், கிரவுண்ட் பள்ளியில் அப்போது இருந்த லேப் இன்சார்ஜ் அவர்தான். நாங்கள்ளால் அறிவியல் வருப்பிர்க்கு வரிசைகட்டி அங்கு சென்றது ஞாபகம் உள்ளது. அங்கு ஒரு எலும்புக்கூடும் அப்போது இருந்தது. எம்.பி.கே வாத்தியார், இவர் ஸ்கூட்டர் ஓட்டும் போது சிக்னல் காண்பிக்கும் அழகே அழகு. பிரைமரி முதல் தொடர்ந்த ஐயர் வாத்தியாரும் உண்டு. இது தவிர பாட்டு வாத்தியார் என்று ஒருவர் இருந்தார் அது தவிர டிராங்கி மாஸ்டர் என்று அழைக்கப்படும் டிராயிங் வாத்தியார்(ஜிண்டான் என்று இவருக்கு அப்போது ஒரு பெயர் உண்டு, மன்னிக்கவும்)
பள்ளியில் படித்த, தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணக்கு மற்றும் வரலாறு, பூமிநூல். 35 எடுத்தால் பாஸ், நான் எஸ்.எஸ். எல். சி.யில் வாங்கியது 304 என்று நினைவு. நான் என்றுமே தமிழ் நன்றாக படித்ததில்லை.. என் தமிழை பார்த்தாலே தெரிந்திருக்கும் என்றாலும் ஆவணப்படுத்த வேண்டியது என் கடமை என நினைக்கிறேன்.
என் ப்ளஸ்டூ நினைவுகள், இன்னொரு நாள்.. (அது முதன்முதலாய் காதல் துளிர்த்த வயது)
அன்புடன், வசந்தா நடேசன்.
>>>ஒருவரை பற்றி இன்னொருவரிடம் கோள்மூட்டா பெரும்பண்பு இருந்தது,
ReplyDeleteஹா ஹா
உண்மையில் பள்ளீப் பருவத்து மாணவர்கள்
ReplyDeleteஇத்தனை பேரின் பெயரை ஞாபகம் வைத்துள்ளது
கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான்
நல்ல இடத்தில் பதிவை நிறுத்தி வைத்துள்ளிர்கள்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து....
வாழ்த்துக்களுடன்....
பழைய நினைவுகள்... புத்துணர்ர்சி தருபவை. நல்ல பதிவு.
ReplyDeleteword verification நீக்கம் செய்தால் நிறைய கருத்துக்கள் பதியப்படலாம்.
ReplyDeleteஞாபகங்கள் எப்போது சுவாரஸ்யமானவை படிப்பவர்களுக்கு. :)))
ReplyDeleteஅருமையாக நினைவுகளை மீட்டிச் செல்கிறிர்கள் மிக்க நன்றி....
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..