இது கொஞ்சம் விபரமான வயது மட்டுமல்ல கொஞ்சம் குழப்பமான வயது.. இந்த வயதில் தீர்மானிக்கபடுவது அல்லது திணிக்கப்படுவது தான் அனேகரின் வாழ்வில் பின்னர் கடைசி வரை நிலைத்திருக்கும். மனிதனின் வாழ்க்கை பயணத்தின் முக்கியமான திருப்புமுனை என்பது என் கருத்து.
என்னால் நல்ல பள்ளி என்று கணிக்கப்பட்டிருந்த எஸ்.எம்.ஆர்.வீ பள்ளியில் ஒரு வழியாக என் அப்பா கொண்டு சேர்த்தார். பயத்துடன் தான் ஸ்கூலுக்குள் சென்றேன். தாழ்வு மனப்பான்மையும் கூடவே தொடர்ந்தது தான் ஆச்சர்யம். பின்னாளில் அதை உடைத்தெறிந்து நான் வெளியே வந்த போது அதனை திரும்பிப்பார்த்தால் வறுமை தான் அதன் துவக்கம் என்று உணர்ந்தேன்.. ம்ம்ம், என்னால் முடியாது, எனக்கு, என் தகுதிக்கு இதுதான் முடியும் என்று சொல்லப்பட்டு வழர்ந்திருக்கிறேன். ஆனால் இது சொல்லப்பட்டது நம் வாழும் முறைக்கு மட்டும் தான், நான் என் சவுகரியத்துக்கு நமக்கு இவ்வளவுதான் படிப்பு வரும், நம்மால் முதல் ரேங்கெல்லாம் வாங்க முடியாது, நமக்கு அது சரி வராது, இது சரி வராது என்று எல்லாவற்றிலும் என்னை தாழ்த்திக்கொண்டு இருந்திருக்கிறேன்.
எஸ்.எம்.ஆர்.வி யில் இடம் கிடைக்க அவ்வளவு கஷ்டப்படவில்லை என் மாமா ஒருவர் அங்கு முன்பே வேலை பார்த்த ஒரு பிரபல கணக்காசிரியர், அவரை சொன்ன போதே சேர்த்துக்கொண்டார்கள். ஆமா, சேந்ததே ஹிஸ்ட்டரி க்ரூப்பு, இதுல ரெக்கமென்டேஷன் வேற.. ஏற்கெனவே சொன்னது போல் 304 மார்க்தான் எடுக்க முடிந்தது இருந்தாலும் என்ன செய்ய வேண்டும் என்று வீட்டில் ஒரு மீட்டிங் போட்டு என் அக்கா தலைமையில் பல விவாதங்கள் நடந்தன..
எடுத்த மார்க்குக்கு பர்ஸ்ட் க்ரூப்பு, செகண்ட் க்ரூப்புன்னா பய படிக்கமாட்டான், ஓடிருவான் என்று யாரோ சொல்ல அடுத்து இருந்தது ஹிஸ்டரி க்ரூப்பு தான், பாடங்கள் என் போதாதவேளை அங்கே தமிழ், ஆங்கிலம், கணக்குப்பதிவியல் (அக்கவுன்டன்ஸி), வணிகவியல், பொருளாதாரம் மற்றும் வரலாறு. (நல்லவேளை புவியியல் இல்லை), அதற்க்கு அடுத்ததாக இன்னொரு க்ரூப்பும் இருந்தது vocational க்ரூப் என்று, நான் ஏதோ லீவு எடுக்றத பத்திலாம் சொல்லிக்குடுக்க ஒர க்ரூப்பா?? என்று என் அறியாமையால் vacation என்று அர்த்தம் பண்ணி நினைத்திருந்தது வேறு கதை. ஏற்கெனவே என்னுடன் ப்ரைமரி மற்றும் ஹைஸ்கூலில் படித்த பலர் முதல் இரண்டு க்ரூப்புகளுக்கும் சென்றுவிட்டனர்.
அப்போது நிலைமை எப்படி என்றால் சயின்ஸ் க்ரூப் படிப்பவர்கள் தங்களை டாக்டர் என்றே நினைத்துக்கொள்வர்கள், அதேபோல் மேத்ஸ் படிப்பவர்கள் அப்போதே எஞ்சினியர் தான். அவர்களுக்கெல்லாம் ஹிஸ்டரி என்றால் கேவலம், கிட்ட தட்ட ஹிஸ்டரி படிப்பவர்கள் ரவுடிகள் போல் தான் நினைப்பு, நம்மை கண்டால் தூர விலகுவார்கள். அது ஏன், vocational பயலுகளே நம்மள என்னாது, ஹிஸ்டரியா?? என்பது போல்தான் பார்ப்பார்கள்.
நம் தகுதிக்கு vocational போணுமா இல்ல ஹிஸ்டரி போணுமான்னு தான் விவாதம், படிக்கப்போற நான் பரிதாபமா வாக்குரிமையே இல்லாம இருந்தேன்?? இவன் என்ன ஆக வேண்டும், எப்படி ஆக்குவது என்பது தான் விவாதம், இதுல எங்க அக்காவோட ப்ரண்ட்ஸ்க்கும் கூட வாக்குரிமை இருந்தது.. பல பள்ளிகளில் இருக்கும் பல பாடப்பிரிவுகளை டிஸ்கஸ் பண்ணி நான் ஒரு கணக்காளனாக வேண்டும் என்று முடிவெடுத்து அவுக பாட்டுக்கு டிஸ்கஷன் போகுது.. நான் மலங்க, மலங்க முழித்துக்கொண்டு நாம என்ன கணக்குல புலியா?? என்று என்னடா நடக்குது என்பது போல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
என் அப்பா கூட அப்பப்ப கருத்து சொல்லிட்டு நிப்பாட்டிட்டாங்க, ஆனால் இவுக தான் எல்லாம் முடிந்து அப்போது எதிர் வீட்டிலிருந்த பயோனியர் குமாரசாமி காலேஜ் லெக்சரர் ஒருவரிடம் மேல் முறையீடுக்கு சென்று, சரி பி.காம் படிக்க வேண்டுமானால் எஸ்.எம்.ஆர்.வீ ஹிஸ்ட்டரி க்ரூப்தான் சரி என்று அவர்களே முடிவெடுத்து ம்ம்ம், போய் சேரு என்று சேர்த்தார்கள். வடிவேலுல்லாம் இல்லை அப்ப, இருந்திருந்தா என்னா வில்லத்தனம் னாவது சொல்லிருப்பேன்.
நானும் கடமைவீரனாக, நான் கணக்கனா?? கணக்குக்கும் எனக்கும் என்னங்க சம்பந்தம்னு புலம்பிக்கொண்டே சென்று சேர்ந்து தொடர்ந்தேன். ஆனால் உண்மையில் அங்கு வைத்த புள்ளி என் வாழ்கையில் சரியாக சென்று நான் இன்று ஒரு வெற்றிகரமான(?) கணக்கராக இருக்கிறேனென்றால் அந்த பெருமை என் அக்காவிற்கே சேரும்.
சென்ற சில நாட்களிலேயே வகுப்பில் எல்லாம் நன்கு பழகி நானில்லாமல் நீ இல்லை என்பது போல் ஆகிவிட்டோம். பல பள்ளிகளில் படித்த பலர் இங்கு வந்து சேர்ந்தனர். நல்ல நண்பர்கள் நிறைய இருந்தனர், சாகுல் ஹமீது என்ற ஒரு நண்பன் ரொம்ப உயிராய் இருந்தான், அவனைப் பற்றி தனியே எழுதுகிறேன் பின்னர் ஒரு நாள். மற்றவர்களில், அழகுராஜ் என்று ஒருவன், ஆள் குள்ளம்.. நாகர்கோவில் பஸ் நிலையம் அருகே ஒரு வெற்றிலை, பாக்கு கடை வைத்து பின்னாளில் பார்த்திருந்தேன், அவனுக்கு வியாபாரம் கொடுப்பதற்காக அங்கே சென்று சிகரெட் வாங்கி அடித்தது உண்டு பின்னர் கல்லூரி நாட்களில். நன்பேண்டா ன்னு அப்பவே நாங்க இருந்திருக்கோம் பாருங்க.
மேலும், நாகராஜ், சுப்பிரமணி, பாலசுப்ரமணியம், ராஜசேகர் மற்றும் அவன் அண்ணன் (சாரி நண்பா பெயர் ஞாபகம் இல்லை) பத்மநாபன், ராஜேந்திரன், சிதம்பரதாணு.
பெண்களில், நினைவில் நிற்பவர்கள் கிருஷ்ணகுமாரி, லதா, லெக்ஷ்மி, முத்துலக்ஷிமி,
மீனா, சாந்தி என்று பக்கத்து வகுப்பில் படித்த சைட்களும் நினைவில் உண்டு, அப்போதெல்லாம் ஏனோ உடன் படித்தவர்கள் எல்லாம் அக்கா தங்கச்சி போலவும் அடுத்த வகுப்பு பெண்களெல்லாம் சைட்கள் போலவும் ஒரு பார்வை இருந்தது போல் ஒரு ஞாபகம்.
வாழ்க்கை பல விசித்திரங்கள் கொண்டது என்பதை புரிந்துகொண்ட என் அனுபவத்திற்கு இதோ இங்கே சொன்னவர்களின் வாழ்க்கையை கொஞ்சம் விவரித்தாலே புரியும். ஏழையாக இருப்பவன் பணக்காரன் ஆவதும், பணக்காரனாக இருப்பவன் ஏழையாக ஆவதும் நம் கண்முன்னே கண்டிருப்போம் பலமுறை.
என் இப்போதைய வெள்ளைக்கார முதலாளி அடிக்கடி சொல்வான், 'see, a minute is enough to change our life upside down' என்று. அதுவும் சமீபத்திய கிரைஸிஸ் வந்தபின் பலரை இங்கிருப்பவர்கள் எல்லோருமே கண்முன் கண்டிருப்பர். முந்தைய மாதம் வரை செல்வச்சீமானாக இருந்தவர்கள், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டதும், ஏர்போர்ட்டிலேயே தான் உபயோகித்த உயர்தர கார் அதன் சாவியுடன், மற்றும் பல வங்கி கடன் அட்டைகள் எல்லாவற்றையும் வண்டிக்குள் வீசிவிட்டு வண்டியை பூட்டாமல் குடும்பத்துடன் ஊருக்கு சென்றவர்கள் பல ஆயிரம். வாழ்க்கை விசித்திரங்கள்.. நாம் எப்போதும் எவ்வளவு கவனமாக வாழ வேண்டும் என்பதற்கு நம் கண்முன்பே நிகழ்ந்து எச்சரிக்கை செய்வது போல்?? சரி, கட்டுரை தடம் மாறி செல்வதால் கதைக்கு திரும்புவோம்.
என் நண்பர்களை நானும் பல சந்தர்ப்பங்களில் முன்பு மீண்டும் சந்தித்திருக்கிறேன். சில விசித்திரங்களை பாருங்கள்.
என் வீட்டின் அருகிலேயே நல்ல செல்வாக்காய் இருந்த பாலசுப்ரமணியம், என்னுடன் படித்த கிருஷ்ணகுமாரியை காதலித்து, இவனும் நானும் மட்டும் தான் என் வகுப்பிலிருந்து பின்னர் இந்துக்கல்லூரிக்கு பி.காம் படிக்க போனோம். மற்றவர்கள் பிற காலேஜ் போயிருக்கக்கூடும். கல்லூரி நாட்களிலும் இந்த காதல் தொடர்ந்திருக்கிறது.. ஒரு கட்டத்தில் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாள்.. என்ன காரணம் என்று இதுவரை எனக்கு தெரியாது.. ஆனால் பாலு படிப்பை அத்துடன் நிறுத்தி அவன் வாழ்க்கையே திசை மாறி அவன் குடும்பமே இந்த ஊரில் இல்லை.. அவர்கள் குடும்ப வீடு இப்போது அப்படியே சிதிலமாய் கிடக்கிறது.. இவன் இன்று வேறு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணி குடியும் குடித்தனமுமாய் ஐந்துக்கும் பத்துக்கும் கையேந்திக்கொண்டு ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறான். இவனை நம்பி வந்தவள், குழந்தையும் கையுமாய் அழுதுகொண்டிருந்தாள் பல வருடங்களுக்குமுன் நான் பார்த்த போது.. அவன் குடும்பமே ஊரைவிட்டு சென்றுவிட்டது அவமானத்திற்கு பயந்து.
ராஜேந்திரன், பக்கத்து வகுப்பு பத்தாப்பு மீனாவை லவ் பண்ணினான், லவ்வுன்னா லவ்வு அப்டி ஒரு லவ்வு, இவனுக்கு லவ் லெட்டர் எழுதிக்கொடுத்தது நான் தான். இவனும் அப்போது நல்ல வசதியாகத்தான் இருந்தான்.. இப்போது ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்க்கிறான். அவன் அப்பா இறந்தபின் குடும்பத்தில் கஷ்டம் என்று கேள்விப்பட்டேன். இவன் லவ் பண்ணிய மீனா இப்போது இன்னொருவனை கல்யாணம் பண்ணிக்கொண்டு ஸ்கூட்டியில் மகனுடன் சுற்றிக்கொண்டிருப்பதை ஒருநாள் பார்த்தேன்.
நாகராஜன் பின்னாளில் பைபிள் மேல் பற்று வந்து கிறிஸ்தவனாக மாறி விட்டான், பின்னர் ஒருநாள் கையில் பைபிள் சகிதம் ஒரு ஃபாதரை போலவே அவனை சந்தித்த ஞாபகம் இருக்கிறது
ராஜசேகர் பின்னர் கேட்டரிங் படித்து சிலகாலம் கழித்து அப்போது இருந்த ஹோட்டல் ராஜம் இன்னில் நான் சென்று சாப்பிட உட்கார்ந்தபோது என்னிடம் ஆர்டர் எடுக்க வந்தான். பார்த்ததுமே புரிந்து பழைய கதைகளை பகிர்ந்தது நினைவிருக்கிறது, பின்னர் சந்தித்ததில்லை.
சுப்பிரமணியமும், பத்மநாபனும் அவர்களின் அப்பாவின் தொழிலையே பின்னாளில் செய்து, சுப்ரமணியம் நலிவடைந்துவிட்டான்.. பத்மநாபனை பார்க்கவில்லை.. ஆனால் அவன் தம்பி பெயின்டராய் போய்க்கொண்டிருக்கிறான், சமீபத்தில் பார்த்தது.
சிதம்பரதாணு பெரியதெருவுக்கு நேர் எதிரில் அப்போது இருந்த ஒரு சைக்கிள் கடையில் பெண்ட் எடுத்துக்கொண்டிருந்தான் நான் கல்லூரியில் படிக்கும் போது, அங்கே காற்றடைக்க எனக்கு பைசா கிடையாது அப்போது.
லதா, ராஜசேகரின் உறவுமுறை, திருமணம் ஆகி எங்கோ நன்றாய் இருப்பதாய் அவனை பார்க்கும் போது சொன்னான், நான் அதற்கு முன்பே அவளை வழியில் திருமணத்திற்குமுன் ஒருமுறை பார்த்து பேசியிருக்கிறேன். வடசேரி சந்தை அருகில்.
லெக்ஷ்மி பயோனியர் தெருவில் வசித்தவள், கல்யாணம் ஆகி சந்தோஷமாய் கணவனுடன் பைக்கில் போவதை ஒருநாள் பார்த்தேன். முத்துலட்சுமி புத்தேரியில் இருந்து வருவாள், ஒருநாள் ஏதோ ஆஸ்பத்திரியில் பார்த்தேன் என்று நினைக்கிறேன்.. நன்கு நினைவில் இல்லை.
ப்ளஸ் டூ நினைவுகள் பதிவின் நீளம் கருதி இன்னொருநாள்.
அன்புடன், வசந்தா நடேசன்.
வாழ்க்கையில் ஒவ்வொருவர் பாதையும் எப்படியெல்லாம் எதிர்பாராத திருப்பு முனையாகவும்,முட்டுச் சந்தாகவும்,கொண்டை ஊசி வளைவுகளாகவும் ...நிஜமாகவே ,நிதானமும் சமயோசிதமும்தான் நம் வாழ்க்கைப் பாதையை நேராக்கும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteஅருமையான அலசல்.
அந்தப் பருவம் உண்மையில் ஒரு
ReplyDeleteநாற்புறச் சந்திப்புதான்
எதைத் தெர்தெடுக்கிறோம்
ஏன் தேர்தெடுக்கிறோம் என்கிற
தெளிவில்லாமல் நாம் எடுக்கும் முடிவே
நம் விதியைத் தீர்மானித்துச் செல்கிறது
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மிக மிக சுவாரசியமாய் இருக்கிறது படிக்க.
ReplyDeleteஎன் பள்ளிப் பருவ நினைவுகள் .. துரத்த வைத்து விட்டீர்கள்
நல்ல நினைவலைகள்..
ReplyDeleteநமக்கு இதெல்லாமில்லைங்கோ திரும்பிபார்க்க..
எதிர்பார்க்கவில்லை.. இத்தனை சுவாரசியம்.
ReplyDelete